மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை இல்லையெனில் மனிதநேயம் இருக்குமா?

மரணத்திற்குப்  பின்னுள்ள வாழ்க்கை இல்லையெனில் மனிதநேயம் இருக்குமா?
நான் மனிதநேயத்தைதான் நம்புகிறேன், மதத்தினை அல்ல.

*******************************


அ. மறுமை வாழ்க்கை (பரலோகம்) மேல்  நம்பிக்கை வைக்காமல் மனிதநேயம் சாத்தியமாகுமா? 

நான் மனிதநேயத்தை நம்பக்கூடியவன். எதுக்கு தேவை இல்லாத நம்பிக்கைகள்?

முதலில் நல்ல மனிதனாயிருப்போம், மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம்.

சொர்க்கம், நரகத்தை பார்த்தவர் யார்? பின்பு ஏன் அவைகளை நம்ப வேண்டும்?

மறுமை வாழ்வு/நம்பிக்கைகள்/கடவுள் போன்ற விஷயங்கள் பேச முயலும்போது,  மேல் சொன்ன கேள்விகளை நம்மால் அடிக்கடி கேட்க முடியும்.

நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை விளக்குவோர் அதன் உண்மைத் தன்மையை உணர வைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற கேள்விகள் பிறக்கின்றன. பகுத்தறிவுள்ளவர்கள், இயற்கையையோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

"நான் மனிதநேயத்தை நம்புகிறேன்" -  இங்கே மனிதநேயம் என்பது எதைக் குறிக்கிறது?

எது மனிதாபிமானம், எது மனிதாபிமானமற்ற தன்மை என்பதனை யார் முடிவு செய்கிறார்? அறநெறி, நல்லொழுக்கம் மற்றும் ஒழுக்கக்கேடு இவற்றிற்க்கான அளவினை யார் நியமிக்கிறார்?

ஒரு கொள்ளைக்காரன் , அவன் கொள்ளையடிக்கும் ஒன்றை, தன் சொந்த சம்பாத்தியம் என்று கருதுகிறான். அது அவனுக்கும் அவனுடைய குடும்பத்திற்குமான வருமானம் என்பதேயன்றி வேறெதுவும் இல்லை என்றே எண்ணுகிறான்.

ஒருவருக்கு சரி என்றிருப்பது, மற்றொருவருக்கு தவறாகிறது. இருவருமே அவரவர் செயல்களை நீதம் என்றும் மனிதாபிமானம் என்றுமே கருதுகின்றனர்.

ஒருவருக்கு மனிதாபிமானம் என்றிருப்பது மற்றொருவருக்கு மனிதாபிமானமற்றதாக இருக்கிறது.ஓரிடத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்கும் ஒரு செயல் மற்றொரு இடத்தில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது.

கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் என அனைத்து குற்றவாளிகளும் தாங்கள் செய்யும் செயல்களை குற்றம் என கருதுவதற்கு பதிலாக, அச்செயல்களை அவர்கள் வாழ்வாதத்திற்கான தேவையாக கருதுகிறார்கள். அதே சமயத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை எதிர்பார்க்கின்றனர்.

இங்கு கேள்வி என்னவென்றால், சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் இடையிலான கோட்டினை வகுத்தவர் யார்? மனிதாபிமானத்திற்கும் மனிதாபிமானமற்ற செயலுக்கும் இடையிலான வரையறையை நிர்ணயித்தவர் யார்?

நம் அறிவே சொல்லும் -  "மனிதாபிமானம், மனிதாபிமானமற்றதன்மை, அறநெறி, நல்லொழுக்கம்,  ஒழுக்கக்கேடு ஆகியவை உயர் அதிகாரம் கொண்ட ஒருவரால் நிரணயிக்கப்படவேண்டும் - அவர் முற்றிலும் நடுநிலை பேணக்கூடியவராகவும், மனிதர்களை போல் அல்லாமல் எல்லா பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவராகவும், நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும்" என்று.

நம் அனைவரையும் படைத்த படைப்பாளரை தவிர வேறு யாருக்கு இந்த தகுதிகள் இருக்க முடியும்? மனிதகுலத்திற்கு எது சரியானது எது தவறானது என்று அவரை தவிர வேறு யாரால் சரியாக சொல்ல முடியும்? இத்தகைய தகுதிகள் கொண்ட, நாம் பார்க்கும், பார்த்திராத அனைத்தையும் படைத்த படைப்பாளரைத்தான் நாம் சங்கை மிக்க கடவுள் என்கிறோம்.

ஒரு சாதாரண மனிதன்  தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவனாக இருக்க முடியாது. மேலும், எந்த மனிதருமே மற்ற மனிதருடைய அனைத்து சூழ்நிலைகள், திறன்கள்,வரம்புகள் ஆகியவற்றை அறிந்து, அதற்கான சிறந்த நீதியினை வழங்குபவராக இருக்க முடியாது.


எல்லா வல்ல சங்கை மிக்க கடவுளால் மட்டுமே தன்னுடைய வல்லமை மிக்க ஆற்றலால் அறநெறிக் கொள்கைகளை நிர்ணயிக்க முடியும். அவர்தான் அறிநெறிகள் மற்றும் மனிதநேயக் கருத்துகளின் மூல ஆதாரம் ஆவார்.

கடவுள் வகுத்த இந்த அறநெறி கொள்கை மற்றும் கோட்பாடுகள் சரிவர இயங்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அவரவர் செயல்களுக்குரிய அனைத்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதாவது அவர்கள் செய்த நன்மைகளுக்கு தக்க பிரதிபலனும் கெட்ட  செயல்களுக்கு  தகுந்த தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். இதைத்தான் நாம் மறுமை வாழ்க்கை அல்லது மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை என்கிறோம். நியாயமானவர் அல்லது அநியாயமானவர், மனிதாபிமானம் உடையவர் அல்லது மனிதாபிமானம் அற்றவர் ஆகிய எவராயினும் , அவருக்கு அவருடைய காலம் வரும்போது அவருக்கானதை பெற்றே தீருவார்.


மனிதநேயத்தின் கருத்தானது இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. அதாவது,

1. இறைவனின் வழிகாட்டுதலில் நிலைத்திருத்தல் மற்றும் இறைவன் வகுத்தவற்றை பின்பற்றுதல்.

2. ஒருவர், தான் உலகில் செய்த செயல்களுக்காக மறுமை வாழ்க்கையில் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.

ஒருவர், தன் செயல்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்ற ஒன்று இல்லையெனில், மறுமை வாழ்க்கை என்பதும் இல்லை அதோடு மனிதாபிமானம், அறநெறி போன்ற கருத்துக்களும் இருக்க முடியாது.

ஆ. மறுமை வாழ்வு: ஒரு தர்க்கரீதியான தேவை

நிச்சயமான ஒன்று: மரணம்

நிச்சயமற்ற ஒன்று : எப்போது மரணம் நிகழும் என்பது!

யூதிஷ்திர் என்பவரிடம் இப்படியாக கேள்வி கேட்கப்பட்டது, "எது மிகவும் ஆச்சர்யமானது?"

அவர் அளித்த பதில், "ஒவ்வொரு நாளும் மனிதன் இறக்கிறான். இறைவனிடமே திரும்பி செல்கிறான். இருந்தும் இந்த உலகில் வாழ வேண்டும் என்றே ஆசை கொள்கிறான் - மனிதனின் இந்த செயல் மிகவும் ஆச்சர்யமானது".

சரி, மரணித்த பின் என்னதான் நடக்கும்?

மறுமை வாழ்க்கையைப் பற்றி மக்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர்.

• Mr. A மறுபிறவியை நம்பக்கூடியவராக இருக்கிறார். அதாவது,மனிதன் தன் பாவங்களுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு உயிரினமாக: மனிதனாக , நாயாக, ஆடாக, .. மீண்டும் மீண்டும் பிறப்பான் என்று நம்புகிறார். இதில் பிறத்தல் - இறத்தல் - பிறத்தல் - இறத்தல் என்று வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கும்.

•Mr. B - முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை அனைவரும் இறந்தபின் மீண்டும் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு அவரவரின் செயல்களுக்குரிய கூலியினை பெறுவர் என்ற கருத்தை நம்புகிறார். மறுபிறவியிலிருந்து மாறுபட்ட கருத்து இது. அதாவது, மனிதன் நியாயத் தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான்,  அவன் இந்த உலகத்தில் செய்த செயல்களுக்கான கூலியினை பெறுவான்.

• Mr. C இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை தவிர வேறு எதுவும் இல்லை என்பதில் நம்பிக்கை கொண்டவர். இவர்கள் மறுபிறப்பு, தீர்ப்பு நாள் போன்ற கருத்துக்களில் இருந்து முற்றிலும் முரண்பட்டவர்கள்.

# இங்கே நம்முடைய கேள்வி:

மூன்று நபர்களும் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பதால் அவரவர் மரணத்திற்கு பின்னர் மூன்று வெவ்வேறான அனுபவத்தை பெற முடியுமா?

அதாவது, மூவரும் மரணித்த பின், Mr. B & Mr. C ஆகியோர் மரணித்தவர்களாகவே இருக்கும் நிலையில், Mr.A மட்டும் மறுபிறப்பு சுற்றின் படி மரணித்த பின் மீண்டும் ஒரு விலங்காகவோ, மரமாகவோ அல்லது வேறொரு மனிதனாகவோ பிறக்க முடியுமா?  இது சாத்தியமானதா?

நிச்சயமாக இல்லை!

எதுவாயினும், யார் எந்த நம்பிக்கையில் இருந்தாலும் மரணித்த பின் அனைவரும் ஒரே மாதிரி அனுபவத்தை தான் பெற முடியும். ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா?

ஆம், இயற்கையின் சட்டம் அனைவருக்கும் ஒன்றே!

இ. மறுமை வாழ்க்கை அல்லது நியாயத்தீர்ப்பு நாள்:

நியாயத்தீர்ப்பு நாள் என்பது,இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் மீண்டும் ஒன்று திரட்டப்பட்டு, அவரவர் செய்த செயல்களுக்குரிய கூலியை பெறுவதாகும். அதாவது நீங்கள் செய்த செயல்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்பது இயற்கையின் விதி அல்லவா?
நல்ல செயல் அல்லது தீய செயல்- எதுவாயினும் அந்தந்த செயல்களுக்கான கூலி வழங்கப்படவேண்டும் என்பது சரிதானே?

இந்த மறுமை நாளின் வழியாகவே நீதி நிலைநாட்டப்படுகிறது.

# இந்த உலகில் நேர்மையுடன் வாழக்கூடிய மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்கின்றனர், இறைவனுக்கு கட்டுப்படுகின்றனர், இறைவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுகின்றனர், தீய செயல்களில் இருந்து விலகி கொள்கின்றனர். ஆனால், சில நேரங்களில் இவர்கள் எந்த தவறுகள் செய்யாவிடினும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆட்கொள்ளப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களின் மரணம் வரை துயரத்துடனேயே வாழ்கிறார்கள்.

அத்தகைய நல்லவர்களுக்கு இந்த உலகத்தில் நீதி கிடைத்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?

அதேபோல், இன்னும் பலர் மற்றவர்களை காயப்படுத்திக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் அவமானப்படுத்திக் கொண்டும் வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பணபலத்தினால் தண்டிக்கப்படாமலேயே தப்பித்து விடுகின்றனர். தீமை தரக்கூடிய செயல்களில் அவர்கள் தங்களை  ஈடுபடுத்திக் கொண்டாலும் , அதற்காக அவர்கள் தண்டிக்கப்படாமல் அவர்களின் மரணம் வரை மிகவும் சௌகரியமாகவே  வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வெகு சிலரை தவிர பெரும்பாலான குற்றவாளிகள் இவ்வுலக நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுவதே இல்லை.

இந்த கெட்டவர்கள் தங்களின் கெட்ட செயல்களுக்கான தண்டனையை பெற்றுக்கொண்டார்களா?

ஏராளமான அநீதிகள் இன்றைய உலகில் நித்தமும் நடந்து கொண்டே இருக்கிறது. பலமுறை இவ்வுலக நீதிகள் அனைவருக்கும் நியாயமானதாக இருப்பது இல்லை. "வலிமையானவனே சரியானவன்" என்ற கருத்தே நிலவுகிறது.

அப்படியென்றால், இந்த முடிவே இறுதியானதா?
இங்கு நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் கிடைக்கவேண்டிய நீதி இன்னும் நிலுவையிலேயே உள்ளது.

சிந்தித்து பார்த்தால், அனைவருக்கும் அவரவர் செயல்களுக்கான கூலி வழங்கப்பட வேண்டும் என்றே நம்முடைய அறிவும் கூறும்.

மறுமை வாழ்க்கை அல்லது மரணித்திற்கு பின் உள்ள வாழ்க்கை பின்வருமாறு இருந்தால் மட்டுமே அது நீதியை நிலைநாட்டுவதாகும்:

உயிர்த்தெழுதல்: நியாயத் தீர்ப்பு நாள் அன்று மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுதல்.

சொர்க்கம்: நல்ல செயல்கள் செய்த நல்ல ஆன்மாக்களுக்கான தங்குமிடம்.

நரகம்: தீய செயல்கள் செய்த தீயவர்களுக்கான தங்குமிடம்.

நாம் அனைவரும் மரணித்த பின் நமக்கான நீதியினை வழங்குபவராக யார் இருக்க முடியும்? நம்மைப் படைத்தவர் மட்டுமே இல்லையா ?

மனிதர்கள் அனைவரும் மரணித்த பின் அவரவர் செயல்களுக்காக - கேள்வி கேட்கப்படாமலும் பொறுப்பேற்காமலும் இருந்தால் என்னவாகும்?

மொத்த உலகமும் குழப்பத்தில் மூழ்கிப் போய்விடும். யாரும் தங்களின் செயல்களுக்காக பொறுப்புசாட்டப்பட மாட்டார்கள் மேலும் யாருமே தண்டிக்கப்பட மாட்டார்கள்.


"மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கை" என்கிற கருத்தியல் இல்லாமல்  "மனிதநேயம்" என்கிற கருத்தியல் இருக்க முடியாது.


********************

Comments