இஸ்லாத்தின் பார்வையில் போர்

 இஸ்லாத்தின் பார்வையில் போர்


அப்பா தன் மகனிடம் “ஆல்பர்ட்!  விளையாடுவதற்குச் செல்ல வேண்டாம்.  வெளியே மழை பெய்கிறது. ”

 ஆல்பர்ட்டின் அப்பா “விளையாடுவதற்கு வெளியே செல்ல வேண்டாம்” என்று கூறியதால், ஆல்பர்ட் எப்போதும் எந்த விளையாட்டையும் விளையாடக்கூடாது. சரிதானே?


 வாசகர்களே, எனது தவறான முடிவின் காரணமாக தயவுசெய்து என் மீது கோபப்பட வேண்டாம்.  முழுமையான பின்னணியையும், சூழ்நிலையையும் விளங்காமல் நான் மேற்கோள் காட்டுகிறேன் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டீர்கள். சரியான கருத்து எதுவெனில் - “ஆல்பர்ட்டின் தந்தை மழையில்தான் விளையாட வேண்டாம் என்று கேட்டுள்ளார். ஏனெனில் ஆல்பர்ட்டுக்கு காய்ச்சல் வரக்கூடும்.  சாதாரண நாட்களில் அவர் விளையாடலாம். ”



இஸ்லாம் பயங்கரவாதத்தை அல்லது வன்முறையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்படுவது, மேற்சொன்ன கருத்துடன் சற்றே ஒத்திருக்கிறது.

திறந்த மனதுடன் இந்த விஷயத்தைப் பார்ப்போம்.


அ. இஸ்லாம் என்றால் அமைதி


 இஸ்லாம் என்பது கடவுளின் மார்க்கத்தை குறிக்க பயன்படும் அரபுமொழிப் பெயர்.  சர்வவல்லமையுள்ள கடவுள் பல வேதங்களின் மூலம் மனிதனை வழிநடத்தியுள்ளார்.  இந்த தொடரில் குர்ஆன் கடைசியாக இறங்கியுள்ளது.  கடவுளின் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் அரபு மொழியில் ஒரு முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறார்.  இஸ்லாத்தின் நோக்கம் அமைதியைப் பரப்புவதாகும்.  அத்தோடு மட்டுமல்லாமல், அமைதியை பூமியில் நிலைநிறுத்துவதற்காக பல்வேறு செயல்முறைகளையும் வழிகாட்டுகிறது. மேலும் இஸ்லாம் கொடுங்கோன்மை, அடக்குமுறை மற்றும் பொய்யை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  துரதிர்ஷ்டவசமாக பற்பல காரணங்களால், இஸ்லாம் வன்முறையை பரப்புவதாக மக்களில் பலர் தவறான எண்ணத்தில் உள்ளனர்.


ஆ. இஸ்லாம் அவரவர் நம்பிக்கைகளை பின்பற்ற முழு சுதந்திரத்தை வழங்குகிறது


 கடவுளின் போதனைகளை ஏற்கவோ நிராகரிக்கவோ ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் உள்ளதாக இஸ்லாம் நம்புகிறது.  எந்த வகையிலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.


“.. (இஸ்லாம்) மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை….”  குர்ஆன்: 2:256


“ (இது) உங்கள் இறைவனிடமிருந்து (அனைவருக்கும்) வந்துள்ள உண்மை. எவர் விரும்புகிறாரோ, அவர் நம்பட்டும், எவர் விரும்புகிறாரோ அவர் நம்பாமல் மறுக்கட்டும்…”அல்குர்ஆன்: 18:29


"நிச்சயமாக இது நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய இவ்வழியைப் பிடித்துக்கொள்ளவும்."(அல்குர்ஆன் : 73:19)


எனவே இஸ்லாத்தில் யாரையும் கட்டாயப்படுத்த இடமில்லை.  இஸ்லாத்தை நம்பும்படி யாரையும் கட்டாயப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது.



இ. ஒவ்வொருவரது உயிரும் புனிதமானது - ஒரு அப்பாவியைக் கொல்வது முழு மனிதகுலத்திற்கும் எதிரான குற்றம்


இஸ்லாத்தில் மனிதனின் உயிர் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.  ஒரே ஒரு அப்பாவியை கொல்வது கூட முழு மனிதகுலத்தையும் கொல்வது போன்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.


"எவனொருவன் மற்றொரு ஆத்மாவை, கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்."

(அல்குர்ஆன் : 5:32)



ஈ. இஸ்லாத்தின் போர்கள்


 இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறை.  இது ஏதோ சில சடங்குகள் அல்லது சம்பிரதாயங்களின் பெயர் அல்ல.   ஆன்மீகம், பொருளாதாரம், சமூகம், தனிமனித ஒழுக்கம் என வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் இஸ்லாம். சமூகத்தில் அமைதியை நிலைநாட்டவும், நிலைநிறுத்தவும் சில சமயங்களில் கடுமையைக் காட்டுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.  அதனால்தான் உலகமெங்கும் இராணுவம், காவல்துறை, நீதித்துறை, சிறை போன்றவைகள் உள்ளன. தவறான விஷயங்கள், அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை போன்றவற்றை நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அது பேரழிவுக்கும், புனிதமான மனித உயிர்களின் இழப்புக்கும் வழிவகுக்கும்.


மக்கள் அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதில், எல்லோரும் ஆர்வம் காட்டுவதில்லை.  உலக லாபங்களைப் பெற தவறான வழிகளைப் பயன்படுத்துபவர்களும் மக்களில் இருக்கின்றனர்.  கொலை, கொள்ளை, நாடுகளின் படையெடுப்பு ஆகிய மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு  தீர்வு என்ன?  நாம் இதனை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அடக்குமுறை தொடரும். மனித வாழ்க்கை புனிதமானது, அது காப்பாற்றப்பட வேண்டும்.


 எண்ணெய், தங்கம், இயற்கை எரிவாயு, தொழில் விரிவாக்கம் போன்ற காரணங்களால் ஒவ்வொரு நாடும் போருக்குச் செல்வதை நாம் காண்கிறோம். ஆனால் ஒரு இஸ்லாமிய அரசமைப்பில் ஒரு அரசு போருக்குச் செல்ல 3 சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதி உள்ளன.



சூழ்நிலை 1: தற்காப்புப் போர்


 ஒருவர் ஒடுக்கப்பட்டால், இந்த அடக்குமுறையை எதிர்த்து, அவரது உரிமைகளுக்காகப் போராட அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய தற்காப்புக்காக போராட இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.  இந்த சூழ்நிலையில் எந்த நாடும் போருக்குச் செல்லும்.  இந்த போரின் நோக்கம் தமக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்தி அமைதியை ஏற்படுத்துவதாகும்.


"அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு, அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது."

(அல்குர்ஆன் : 22:39)



சூழ்நிலை 2: தாக்குதல் போர்


 வேறு பிராந்திய மக்கள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்றால், இந்த பயங்கரவாதத்தைத் தடுக்க இந்த விஷயத்திலும் போர் அனுமதிக்கப்படுகிறது. அமைதியையும் நீதியையும் நிலைநாட்டவே இத்தகைய போர்.


"பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக இறைவனின் பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் : 4:75)



சூழ்நிலை 3: வரவிருக்கும் ஆக்கிரமிப்பை நிறுத்த


 ஒரு இஸ்லாமிய நாடு வேறு ஏதேனும் ஒரு தேசத்துடன் சமாதான ஒப்பந்தத்தில் இருந்தால்,  யுத்தத்தை நடத்துவதற்கும், பயங்கரவாதத்தை பரப்பும் நோக்கத்துடன் ஒப்பந்தம் மீறப்படுகிறது என்றால் அது சமயத்திலும் போருக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

குர்ஆன், அத்தியாயம் 9ன் ஆரம்பத்தில் இந்த வகையான சூழ்நிலை பற்றி பேசுகிறது.


மேலே குறிப்பிடப்பட்ட சூழ்நிலைகள்  மட்டுமே யுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகள்.  மேலும் எந்தவொரு நியாயமான மற்றும் அமைதியான தேசமும் இந்த சூழ்நிலைகளில் போர்செய்வது தவிர்க்க முடியாதது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.


இது போன்ற நெறிமுறைகள் இன்று பல நாடுகளில் யுத்தங்களில் பின்பற்றப்படுகிறது. ஆனால், இஸ்லாத்தின் நெறிமுறைகள் மற்ற முறைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பின்னால் பார்க்கலாம்.


யுத்தம் செய்வது வெறுக்கக்கூடியதாக இருந்தாலும், சில விதிவிலக்கான தருணங்களில் அமைதியை நிலைநாட்ட இஸ்லாம் அதனை அனுமதிக்கிறது. ஆனால், அத்தோடு இஸ்லாம் நிறுத்திக்கொள்ளவில்லை, யுத்தகளத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும்  நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களை இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. அதாவது,


1. போரின் போது போர்புரிய வந்தவர்களை மட்டுமே தாக்க வேண்டும்.


2. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை தாக்கக்கூடாது.


3. மத வழிப்பாட்டுத்தலங்களை சேதப்படுத்தவோ அல்லது தகர்க்கவோ  கூடாது.


4. மரங்களை வெட்டுவதோ அல்லது எரிப்பதோ கூடாது. மற்றும் விலங்குளை துன்புறுத்தக் கூடாது.


5. எதிரிகள் அமைதியை விரும்பினால் போர் நிறுத்தப்பட வேண்டும். அல்லது அவர்கள் நேரம் கேட்பார்களேயானால் நீங்கள் தொடர்ந்து போர் செய்வதை நிறுத்த வேண்டும்.   


6. ஒருவேளை எதிரி உங்களிடம் புகலிடம் வேண்டினால், அவர்களைத் தாக்காமல் ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட வேண்டும்.


7. போரின் போது கூட வரம்பை மீறக்கூடாது என்று குர்ஆனில் பல இடங்களில்  இறைவன் கட்டளையிடுகிறான். இது ஏனெனில், யுத்தத்தின் நோக்கம் ஒடுக்குமுறையை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்க்கே அன்றி வேறு வகையில் அது சென்று விடக்கூடாது என்பதேயாகும்.  


இந்த ஏழு நெறிமுறைகளை இன்று எந்த நாடு பின்பற்றுகிறது ?


சிலர் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ எந்த சூழ்நிலைகளில் குர்ஆன்  வசனங்கள் போர் குறித்து பேசுகிறது என்று விவரிக்காமல், இஸ்லாம் பயங்கரவாதத்தை அல்லது தேவையற்ற வன்முறையை ஊக்குவிக்கிறது என்று மேற்கோள் காட்டுகிறார்கள். குர்ஆனில் போர் குறித்த எல்லா வசனங்களும் மேலே கூறப்பட்ட மூன்று விதமான சூழ்நிலைகளில் ஏதோ ஒன்றுக்கு பொருந்தக்கூடியதாகத்தான் இருக்கும். நீங்கள் சரிபார்க்க வேண்டுமெனில் அவர்கள் அவ்வாறு மேற்கோள்காட்டுகிற வசனங்களில் முன்பும் பின்பும் உள்ள பத்து வசனங்களை படித்துப்பாருங்கள், உண்மை தெளிவாகிவிடும்.


இவ்வாறு சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் வசனங்களை மேற்கோள் காட்டுவதினால்தான்  மக்கள் தவறான முடிவுக்கு வருகிறார்கள், நாம் முதலில் குறிப்பிட்ட ஆல்பர்ட் உடைய தந்தையின் அறிவுரையைப் போன்று. 



ஊ. முடிவுரை


1. சூழலுக்கு வெளியிலிருந்து மேற்கோள் காட்டுவது முற்றிலும் மாறுபட்ட ஒரு தவறான புரிதலில் சென்று முடியும்.


2. இஸ்லாத்தின் நோக்கம் அமைதி மற்றும் நீதியை நிலைநாட்டுவதுமேயாகும்.


3. இஸ்லாத்தை பரப்புவதற்குப் படையை உபயோகப்படுத்த வேண்டும் என்ற தேவையேயில்லை.


4.  இஸ்லாம் உயிர்களை மிகவும் புனிதமாக கருதுகிறது. ஒரு அப்பாவியைக் கொல்வது மனிதகுலத்திற்க்கே எதிரான குற்றமாகும்.


5. ஒடுக்குமுறை, கொடுங்கோன்மை மற்றும் கொலை ஆகியவற்றைத் தடுப்பதற்கும் அமைதியையும் நீதியையும் மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டுமே இஸ்லாத்தில் போர் அனுமதிக்கப்படுகிறது.

Comments